சின்னத்திரை நிகழ்ச்சி - ஜட்ஜ் ஓவியா!

நடிகை ஓவியா கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்க இருக்கிறார்.
களவாணி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஓவியா. பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர், ஆரவுடன் கொண்ட காதல் பிரச்சினையால் பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
டைட்டில் வின்னராக வருவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓவியா பாதியிலேயே விலகினாலும், அவருக்கென ஆர்மி ஆரம்பித்தனர் அவரது ரசிகர்கள். இன்றளவும் ஓவியாவிற்கான புகழ் தொடர்ந்து வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் அவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பார் எனத் தகவல்கள் வெளியானது. ஆனால், முதல் சீசன் முடிந்து, இரண்டாவது சீசன் ஆரம்பித்து, தற்போது அதுவும் முடிந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டது. ஆனபோதும் ஓவியா நடித்த ஒரு சில விளம்பரப் படங்களைத் தவிர வேறு எந்த அவருடைய திரைப்படங்களும் ரிலீசாகவில்லை.
இதனால் மீண்டும் அவர் சின்னத்திரைக்கே திரும்பியுள்ளார். இம்முறை போட்டியாளராக இல்லாமல், நடுவராக களமிறங்குகிறார் ஓவியா. கலர்ஸ் சேனலில் இம்மாதம் 24ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள டான்ஸ் வெஸ் டான்ஸ் நடன நிகழ்ச்சி தான் அது.
இந்த நிகழ்ச்சிக்கு நடன இயக்குநர் பிருந்தா ஒரு நடுவராகவும், நடிகர் நகுல் மற்றொரு நடுவராகவும் உள்ளனர். மூன்றாவது நடுவரை இதுவரை சஸ்பென்ஸாக வைத்திருந்த சேனல், தற்போது அது ஓவியா தான் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த நிகழ்ச்சி வருகிற 24ம் தேதி முதல் கலர்ஸ் சேனலில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ஒவ்வொரு சேனலிலுமே வெவ்வேறு பெயர்களில் டான்ஸ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வரும் சூழ்நிலையில், ஓவியா பங்கேற்பதால் நிச்சயம் இந்த டான்ஸ் வெஸ் டான்ஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Previous
Next Post »