பிக்பாஸ் ஜூலியின் அம்மன் தாயி! | கலாட்டா டுடே

பிக்பாஸ் ஜூலியின் அம்மன் தாயி பட பாடல் வைரலாகி வருகிறது.
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. அதனால் பிக்பாஸுக்கு வந்த ஜூலி, பிறகு தன்னுடைய செயல்பாடுகளால் விமர்சிக்கப்பட்டார். ஆரம்பத்தில் ஜூலியை ஆகா ஓகோ என புகழ்ந்த ரசிகர்கள், பிறகு திட்டித் தீர்க்க ஆரம்பித்தார்கள்.
எது எப்படியோ செவிலியராக இருந்த ஜூலிக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பலரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டாலும், தொலைக்காட்சி தொகுப்பாளராகி, இப்போது நடிகையும் ஆகிவிட்டார். தமிழ் சினிமாவில் அம்மன் படம் வந்து ரொம்ப நாளாச்சே என கவலைப்படும் ரசிகர்களுக்காகவே ஜூலி அம்மனாக அவதரித்திருக்கும் படம் தான் அம்மன் தாயி. கேசவ் புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை மகேஷ்வரனும், சந்திரஹாசனும் இணைந்து இயக்கியுள்ளனர்.
இப்படத்தில், அழைக்கட்டுமா தாயே அழைக்கட்டுமா.. அவ அக்கா தங்கை ஏழு பேரை அழைக்கட்டுமா என்ற சிங்கிள் ட்ராக் ரிலீஸ் ஆகி வைரலாகி வருகிறது. மடப்புரம் பத்ரகாளி, சமயபுரம் மாரியம்மா, யானைக்குழாய் தீர்த்தக்காரி என அம்மன் பெயர்களை பட்டியலிடும் இப்பாடலை பிரபல பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பாடியுள்ளார்.
தியேட்டரில் பார்ப்பவர்கள் சாமியாட்டம் ஆட வேண்டும் என்ற நோக்கத்தில் பாடல் மெட்டமைத்து பாடப்பட்டிருப்பதாக பாடலில் அறிவிக்கின்றனர். இப்பாடலை தேவர்குமரவேல் எழுதியுள்ளார். பிரேம்குமார் சிவபெருமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ஜூலி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அம்மனாகவும், அம்மனின் பக்தையாகவும் காட்சி தரப் போகிறார். ஜூலி கிறிஸ்தவப் பெண் என்பதால் ஆரம்பத்தில் நடிக்க தயக்கம் காட்டியதாகவும், பிறகு முறைப்படி விரதமிருந்து இப்படத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
Previous
Next Post »